மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி விளாம்பட்டி சாலையில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மேலாமத்தூர் பஞ்சாயத்தில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தினேஷ் தனது நண்பரான பிரதீப் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது உப்போடை பாலம் அருகே கண்ணன் என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் தினேஷின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த பிரதீப் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.