புதிதாக பல விளையாட்டுகளில் நமது இந்திய வீரர்கள் முதன்முறையாக தகுதி பெற்று ஒலிம்பிக்கு சென்றது பாராட்டுக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 127 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை இந்தியாவிற்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து வீரர்களிடமும் காணொளி வாயிலாக பேசினார். தற்போது வீரர்கள் அனைவரும் ஊர் திரும்பிய பிறகு இரவு விருந்து அளிக்க இருப்பதாக கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ள வீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் அனைவரும் பங்கேற்பதற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும் இந்திய வீரர்கள் மிகத் திறமையாக செயல்பட்டு புதிய அடையாளத்தை உருவாக்கி உள்ளனர். கொரோனா பிரச்சனைகள் இருந்த நிலையிலும் நமது வீரர்கள் சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்டு தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும் பல புதிய விளையாட்டுக்களில் முதன் முறையாக இந்திய வீரர்கள் தகுதி பெற்று ஒலிம்பிக்கில் பங்கேற்றது மிகவும் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.