பல்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்களை உள்ளடக்கிய இந்தியாவில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவமாக கொண்டாடும் ஒரு நிகழ்வுதான் சுதந்திரதின விழா. அந்த வகையில் நாட்டின் சுதந்திரதின விழாவானது அனைத்து மக்களாலும் ஒரு சேர கொண்டாடப்படும் அரசு பொது விழாவாகும். அந்த அடிப்படையில் இந்த வருடம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று 75வது சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தினம் அரசு பொது விடுமுறையாக உள்ளதால் நாடு முழுதும் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்படும்.
தற்போது இந்த வருடத்திற்கான சுதந்திரதின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு பல்வேறு மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகள் திட்டமிட்டு வரும் சூழ்நிலையில், இது 75-வது ஆண்டு என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த வருடம் சிறப்பு நிகழ்ச்சியாக சுதந்திரதினம் கொண்டாடப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருக்கிறார். அதாவது உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையிலும் இந்த வருடம் சுதந்திரதினம் விடுமுறையாக இருக்கப்போவதில்லை.
அந்த அடிப்படையில் மாநிலம் முழுதும் உள்ள அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்களுடன் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சந்தைகள் இந்த வருடம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மூடப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் சென்ற 75 வருடங்களில் இப்படி நடப்பது இதுவே முதன்முறையாகும். தற்போது 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தீபாவளி பண்டிகையின்போது செய்வது போன்று மாநிலம் முழுதும் சிறப்பு சுகாதார இயக்கம் மேற்கொள்ளப்படும் எனவும் இதனை தேசிய பொது இயக்கமாக மாற்றவேண்டும் எனவும் அரசாங்கம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் டி.எஸ்.மிஸ்ரா கூறியிருப்பதாவது , சுதந்திரப் போராட்ட தியாகிகள் தொடர்புடைய இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இதனிடையில் சுதந்திரதின வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும். சுதந்திரதின விழாவை அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியாக மட்டும் கடைபிடிக்க கூடாது. அனைத்துதரப்பு மக்களும் அதில் கலந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் சமூகஅமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், என்சிசி மற்றும் என்எஸ்ஓ கேடட்கள், வர்த்தக அமைப்புகளை இதனுடன் இணைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.