பெங்களூருவில் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதி லண்டனில் வசித்து வந்தனர். அவர்களில் மனைவிக்கு சுற்றுப்புறத்தை அதீத சுத்தமாக வைத்துக்கொள்ளும் வகையிலான உளவியல் பிரச்சினை (OCD) இருந்துள்ளது. தன் கணவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் தொடர்ச்சியாக செல்போன், ஷூக்கள், துணிகளைச் சுத்தப்படுத்துமாறு மனைவி கூறியிருக்கிறார்.
இதனால் எரிச்சலடைந்த கணவர் , சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பி தன் மனைவியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். மனநல ஆலோசனைக்குப் பிறகு இப்பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதனால் கணவர் பயன்படுத்தும் மடிக்கணினி, செல்போன், குழந்தைகள் பயன்படுத்தும் புத்தகப்பை போன்றவற்றைச் சோப்புத்தூள் கொண்டு கழுவுவது, வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வதாகவே மனைவி இருந்து வந்திருக்கிறார்.
இதனால் பொறுமையிழந்த கணவர், ஆர்.டி. நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகாரளித்துள்ளார். காவல் துறையினர் இவ்விவகாரத்தை பெண்களுக்கு உதவியாக இயங்கிவரும் இயக்கத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தன் மனைவியின் OCD பிரச்சினையைக் காரணம் காட்டி பெங்களூருவில் கணவர் விவாகரத்து கோரும் சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.