சுப்ரீம் கோர்ட்டில் முதல் முறையாக ஒன்பது புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளை தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் குழு பரிந்துரை செய்யும். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். அதனடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டிற்கு புதியதாக 9 நீதிபதிகள் நியமிக்க கடந்த 17ஆம் தேதி கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது. இதனை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமித்தார்.
இன்று புதிய நீதிபதிகளான 9 பேரும் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியை சேர்த்து மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது பதவி ஏற்றுள்ள 9 நீதிபதிகள் சேர்த்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது.