உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள காரணத்தால் அங்கு உள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் வாயிலாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தாய்நாடு வந்து சேர்ந்துள்ளனர். இந்நிலையில் சுமி நகரில் ரஷ்யப் படைகள் குண்டுமழை நடத்தி வருவதால், அங்கு சுமார் 700 இந்திய மாணவர்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அந்த மாணவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உதவுமாறு உக்ரைன் அதிபரான விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதின் ஆகியோரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார்.
இதையடுத்து ரஷ்யா-உக்ரைன் என இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து, சுமி நகரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இந்திய மாணவர்கள் நேற்று பேருந்துகள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த பெண் அஸ்மா ஷாபிக் மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர், துனிஷியவை சேர்ந்த 2 பேர், வங்காளதேச நாட்டவர்கள் 13 பேரும் இந்திய மாணவர்கள் 700 பேருடன் இந்திய தூதரகம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியால் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.