தேனியில் பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் ஆத்தியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடமலைக்குண்டிலிருந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதற்கிடையே அவர் கரடிப்பட்டி அருகே வந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து நிலைதடுமாறி திடீரென்று இவர் மீது மோதி சாலையோரம் சென்று கொண்டிருந்த பள்ளி பயிலும் செந்தில்குமார் என்பவர் மீதும் மோதியது.
இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் ஆத்தியப்பன் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆத்தியப்பனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.