அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது “அ.தி.மு.க-வை கடந்த 1972ம் வருடம் எம்ஜிஆர் துவங்கினார். இதையடுத்து 1991ம் வருடம் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். இவர் முதல்வராக பொறுப்பேற்றபோது தென் தமிழகத்திலிருந்து ஒரு சுயநலத்தின் அடையாளமாக அத்தனை சித்து விளையாட்டுகளை செய்யக்கூடிய பன்னீர்செல்வம் வந்த பிறகு ஜெயலலிதாவுக்கே ஆபத்து வந்தது. சுயநலத்தின் மறு உருவமாக இருக்கிற பன்னீர் செல்வம் அன்றைக்கு மீண்டுமாக முதலமைச்சராக வருகிறார்.
அந்த சித்து விளையாட்டுகளை பன்னீர் செல்வம் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். முதல்வரின் பதவிக்கு ஆபத்துநேரிடும் போது அதனை தனக்கு சாதகமாக்கி 3 முறை முதலமைச்சராக இருந்தேன் என மார்தட்டிக் கொள்கிற சுய நலத்தின் மொத்த உருவம் ஓபிஎஸ். சாதாரண பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவிக்கு தேவைப்படும்போது எல்லாம் பரிந்துரை செய்த டி.டி.வி தினகரனை அரசியலில் அப்புறப்படுத்த, ஓபிஎஸ் சித்து விளையாட்டு நடத்தினார். அத்தனை அசுர குணங்களை மனதில் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் காட்டும் மாயத்தோற்றத்தை மக்கள் அறியும்நாள் வெகு தொலைவில் இல்லை.
துணை முதல்வராக இருந்தபோது 7 முறை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஏன் ஒருமுறை கூட நீதிபதி கமிஷன் முன் ஆஜராகவில்லை. பதவிபோன பிறகு 8வது முறையாக ஆஜராகி அந்தர் பல்டியாக தலைகீழாக மாற்று கருத்துக்களை கூறினார். தன்னை எதிர்ப்பவர்களை அடியோடு அழிப்பவர்தான் பன்னீர் செல்வம். அவரது சித்து விளையாட்டுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஜெயலலிதா தப்பமுடியாமல் கடைசியில் முதல்வர் பதவியை பன்னீசெல்வத்திடம் கொடுத்தார்.
அவர் நிகழ்த்திவரும் நாடகத்தை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை. சசிகலாவை சிறையில் தள்ளி அரசியல் அனாதை ஆக்கியது சாட்சாத் பன்னீர்செல்வம் தான். அ.தி.மு.க-வை நீங்கள் உங்களது குடும்ப சொத்தாக நினைக்கிறீர்கள். அது ஒரு போதும் நான் இருக்கும்வரை நடக்காது. உங்களின் பணம் பாதாளம் வரை பாயட்டும். அதுக்கு நான் கவலைக்கொள்ளவில்லை. ஆகவே பார்த்துவிடலாம் எத்தனை நாள் நடக்கிறது உங்கள் திருவிளையாடல் மற்றும் சித்து விளையாட்டு. இது தான் உங்களுக்கு இறுதி அத்தியாயம்” என்று பேசினார்.