எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுயநிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
புகழ்பெற்ற பாடகர் எஸ்பிபி கடந்த ஐந்தாம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தினந்தோறும் அறிக்கையை வெளியிட்டு வந்தது. அதுமட்டுமன்றி அவருடைய மகனும், எஸ்பிபி உடல்நிலை குறித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
அதனைத்தொடர்ந்து அவரின் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டனர். அதுமட்டுமன்றி திரையுலக பிரபலங்கள் சிலர் ஒன்றிணைந்து கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னர் எஸ்.பி.பி உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் சுயநினைவுக்கு திரும்பி உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. நேற்று எந்த ஒரு அறிக்கையும் மருத்துவமனை சார்பில் வெளியிடப்படாத நிலையில், இன்று மருத்துவமனை நிர்வாகம் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ” எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் சிறிய அளவில் பிசியோ தெரபி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அவர் சுய நினைவுடன் இருக்கின்றார். அவரை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவமனை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையால் எஸ்பிபி ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.