மேற்கு வங்க மாநிலம், தெற்கு டம்டம் நகராட்சிக்கு வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 9 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுர்ஜித்ராய் சுவுத்ரி என்பவர் விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு பதில் அவரது மனைவி ரீட்டா ராய் சவுத்ரிக்கு வாய்ப்பு வழங்குவதாக கட்சி மேலிடம் தெரிவித்தது. பிறகு ஒரு சில நாளில் திடீரென வேட்பு மனுவை வாபஸ் வாங்குமாறு கட்சி மேலிடம் கூறியது. இதனை தொடர்ந்து ரீட்டா ராயின் கணவரும் வேட்பு மனுவை வாபஸ் வாங்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் ரீட்டா ராய் வேட்பு மனுவை வாபஸ் வாங்க முடியாது எனவும் கட்சி வாய்ப்பு கொடுக்க மறுக்கும் பட்சத்தில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாகவும் ரீட்டா ராய் கூறியுள்ளார்.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரீட்டா ராய் கோபித்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுர்ஜித் தன்னுடைய மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கட்சியை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது எனவும், இதனால் தன்னுடைய அரசியல் வாழ்க்கை பறிபோகும் ஆதலால் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.