ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தென்குமரை கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பவருக்கு சொந்தமான 6 1/2 ஏக்கர் நிலத்தை வெங்கடாச்சலம் 82 லட்ச ரூபாய்க்கு விலை பேசி முடித்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு 21 லட்ச ரூபாயை வெங்கடாசலம் அட்வான்ஸ் தொகையாக கொடுத்துள்ளார்.
இதனையடுத்து நிலத்தை பத்திர பதிவு செய்ய மறுத்து ராமசாமி அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராமசாமி தனது அக்காள் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியரான பூவாயி என்பவருடன் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரும்பு கம்பிகள் உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் ராமசாமி, பூவாயி ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் வீடு மற்றும் அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராமசாமி மற்றும் பூவாயி ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பூவாயி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமசாமிக்கும், வெங்கடாசலத்திடம் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. எனவே தலைமறைவாக இருக்கும் வெங்கடாசலத்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.