மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே தெக்கன்திருவிளை பகுதியில் பழனிக் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுக்கோட்டுதலை ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக இருக்கிறார். இவருக்கு ஜெமிலா என்ற மனைவியும், ஆஷிகா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஆஷிகா 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களின் உறவினர்கள் சிலர் சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இவர்களுடன் ஆஷிகாவும் சுற்றுலா செல்ல விரும்பியுள்ளார். ஆனால் பெற்றோர் சுற்றுலா செல்வதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆஷிகா மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஆஷிகா நீண்ட நேரம் ஆகியும் அறையைவிட்டு வெளியே வராததால் ஜெமிலா அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ஆஷிகா தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெமிலா கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அதன்பிறகு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆஷிகாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆஷிகாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.