கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்த வாலிபர் பவானி ஆற்றில் குளித்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பகுதியில் சிங்காரவேலு என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் யோகேஷ்(33) கோவையில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் யோகேஷ் அவர் நண்பர்கள் 19 பேருடன் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின் கொடிவேரி அணையை சுற்றி பார்த்துவிட்டு அருகில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்றார்கள்.
அப்போது யோகேஸின் நண்பர்கள் ஆற்றின் கரையில் ஓரத்தில் நின்று குளித்தார்கள். ஆனால் யோகேஷ் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். அப்போது யோகேஸ்க்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியாமல் பிணமாக மீட்டுள்ளனர். இத்தகவல் அறிந்து விரைந்து வந்த பங்களாபுதூர் காவல்துறையினர் யோகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.