மலேசிய நாட்டின் தலைநகர் கோலம்பூர் அருகே பதங்கலி எனும் நகரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நகரில் தனியார் வேளாண் பண்ணை ஒன்று உள்ளது. இந்த விவசாய பண்ணை உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு மிக சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருந்து வருகிறது. உள்ளூர் வாசிகள் இந்த பண்ணையை வாடகைக்கு எடுத்து அங்கு குடில்கள் அமைத்து பொழுதை கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென இந்த வேளாண் பண்ணையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகளின் குடில்கள் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளது. இதில் ஏராளமானோர் உயிரோடு மண்ணில் புதைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து விபத்தில் 53 பேர் காயங்கள் எதுவும் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் 21 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் காணாமல் போன 12 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இருப்பினும் மீட்பு குழுவினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.