கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்து பேசியுள்ளார்.
அப்போது அமைச்சர் கூறியதாவது, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குமரி மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சுற்றுலா தலங்கள், அருவிகள், பூங்காக்கள், அரிய வகை மூலிகைகள், இயற்கை சூழல் நிறைந்த பகுதிகள், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய kumaritourism.com என்ற புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.