ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அடுத்து பவானிசாகர்அணை இருக்கிறது. தென் இந்தியாவின் மிகப் பெரிய மண்அணை என்ற பெருமை இதற்கு உண்டு. அணையின் முன்பு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா இருக்கிறது. இப்பூங்காவில் வண்ண வண்ண மலர்கள், ஊஞ்சல், சறுக்குப்பாறை, நீரூற்று, படகுசவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த பூங்காவிற்கு ஈரோடு மாவட்டம் மற்றும் அருகேயுள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வந்து செல்வார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கு அன்று லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பவானிசாகர்அணை முன்பு உள்ள பூங்காவில் குவிவது வழக்கம் ஆகும். ஏனெனில் அன்றையதினம் மட்டும் சுற்றுலா பயணிகள் அந்த அணையின் மேல் பகுதிக்கு சென்று அங்கு கடல்போல் காட்சியளிக்கும் நீர்த்தேக்க பகுதியை கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு திருவிழா அன்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு போக அனுமதியில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்துள்ளது. நேற்றுமாலை அணையின் நீர்மட்டமானது 100.52 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி அணையின் மேல்பகுதியில் அனுமதி இல்லை என பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. பொதுப்பணித்துறையின் இந்த உத்தரவு சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.