கர்நாடகாவில் உள்ள மால்பே கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடகாவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகின்ற நிலையில் குளுமையான சுற்றுலா தளங்களை தேடி மக்கள் செல்கின்றனர். இங்கு உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மால்பே கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியிருக்கின்றனர். மால்பே கடற்கரைக்கு தினமும் 4 முதல் 5 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் தற்போது வார இறுதி நாட்களில் 10 ஆயிரத்தை தாண்டி பயணிகள் வருகின்றனர்.
மேலும் படகு சவாரி, வாட்டர் ஸ்கூட்டர்கள், மிதக்கும் பாலங்கள் மற்றும் பாராசூட்டுகள் ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் மிகவும் உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர். மால்பேயில் சுற்றுலா சீசன் ஜூன் 1-ம் தேதியுடன் முடிவடைகின்றது. மழைக் காலத்தின் தொடக்க காலத்தில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்ற காரணத்தினால் ஜூன் 1-ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் இங்கு வர அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தில் 15 நிமிடங்களுக்கு ரூபாய் 100 கட்டணத்தில் சிறப்பு அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த பாலத்தின் இருபுறமும் பயணிகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு வளைவு அமைக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக 10 லைஃப் கார்டுகளும்,30 லைப்பாய்களும் இருக்கின்றனர். மேலும் மிதக்கும் பாலத்தை அனுபவிக்க விரும்பும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயமாக லைப் ஜாக்கெட் அணிந்து இருக்கவேண்டும்.
இந்த மிதக்கும் பாலம் ஆனது 100 மீட்டர் நீளமும், 3.5 மீட்டர் அகலமும் உடையது. மேலும் இது அதிக அடர்த்தி கொண்ட போன் டோன்ஸ் எனப்படும் மூலப்பொருட்கள் கொண்டு செய்யப்படுகின்றது. இந்த பாலத்தின் முடிவில் 12.5 மீட்டர் நீளமும் 7.5 மீட்டர் அகலமும் கொண்ட தளம் 15 நிமிடங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றது. இந்த பாலத்தை உடுப்பி எம்.எல்.ஏ ரகுபதி பட் திறந்து வைத்துள்ளார்.
இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 100 சுற்றுலா பயணிகள் வரை நடக்க அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு அளிப்பதற்காக 10 உயிர் காக்கும் காவலர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மிதக்கும் பாலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. பாதுகாப்பிற்காக எப்போதும் பாலத்தின் அருகில் படகு நிறுத்தப்பட்டிருக்கிறது.