கேரள மாநிலத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று சுற்றுலா துறை. இங்கு சுற்றுலாவையே பிரதான தொழிலாக கொண்ட பலருக்கு கொரோனா முடக்கம் பேரிடியாக அமைந்தது. அந்த வகையில் சுற்றுலா பேருந்தை இயக்குபவர்களுக்கு கொரோனா காரணமாக வேலை இல்லாததால் பேருந்துகளை பழைய விலைக்கு கிலோ 45 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ரோய் டூரிஸம் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரோய்சன் ஜோசப் கூறியதாவது, “கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 12-18 மாதங்களில் மட்டும் என்னிடமிருந்த 20 வாகனங்களில் 10 வாகனங்களை விற்பனை செய்து விட்டேன். வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் மூணாறு சாலை சுற்றுலா பயணிகளின் வருகையால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். ஆனால் தற்போது மூணாறு செல்லும் பாதை பாதை பாலைவனமாக காட்சி அளிக்கிறது.
இது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.!” என கூறினார். இதுகுறித்து சுற்றுலா பேருந்துகள் கழகத் தலைவர் பினு ஜான் கூறுகையில், “கடந்த சில நாட்களாக சுற்றுலா பேருந்துகளின் மதிப்புகள் 12 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து விட்டன. அதோடு கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி செலுத்தாததால் சுற்றுலா பேருந்துகளை ஜப்தி செய்து வருகின்றனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் வங்கிகள் மற்றும் கடன் கொடுத்தவர்கள் ஜப்தி செய்யப்பட்டுவிட்டன. வருகின்ற காலங்களில் இந்த எண்ணிக்கை 3000 ஆக உயரக்கூடும் என கூறப்படுகிறது. இது குறித்த சரியான புள்ளிவிவரம் மார்ச் மாதம் தெரியவரும்.” என அவர் கூறினார்.