சுற்றுலா வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் வேனில் கோயம்புத்தூருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு அவர்கள் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குதிரைகல்மேடு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பவானி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ராஜேஷ்குமார்(26), ரூபன் குமார், பிரபு, சந்தோஷ் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.