சுவரில் ஓட்டை போட்டு 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் உள்ள அனுமந்தையில் நகை அடகு வைக்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை சாந்தாராம் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பின்புற சுவரில் ஓட்டை ஒன்று இருந்தது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த சாந்தாராம் கடைக்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா, டிவி, பிரிண்டர் போன்ற 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தாராம் மரக்காணம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.