சுவர்களுக்கு இடையே மான் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதியில் பா. ஜ. க. நகர தலைவரான தணிகைமணி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பிற்கு நேற்று முன்தினம் அருகில் இருக்கும் காட்டில் இருந்து வழி தவறி மான் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் அந்த மான் தோப்பில் அமைந்துள்ள பம்புசெட் அறை சுவர் மற்றும் சுற்று சுவர்களுக்கு இடையே சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளது.
இதனை பார்த்த தணிகைமணி மாந்தோப்பு பணியாளர்கள் உதவியுடன் மானை மீட்க முயன்றார். ஆனால் மானை மீட்க முடியவில்லை. இதனையடுத்து அவர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் அப்பகுதி மக்களின் உதவியுடன் சுமார் 5 மணி நேரம் போராடி மானை உயிருடன் மீட்டுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த அந்த மானை வனத்துறையினர் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது. மான் குணமடைந்த பிறகு காட்டில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.