வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்மருதூர் கிராமத்தில் விவசாயியான பக்கிரி சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபட்டு(65) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது 3-வது மகன் மணிகண்டன் என்பவர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்த வீட்டிற்குள் அன்னபட்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து அவர் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த அன்னபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதே போன்று பையூர் பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவரது வீட்டின் மண்சுவர் மழையின் காரணமாக ஊறிப்போய் இருந்தது. நேற்று காலை கணேசனின் மனைவி மலர்கொடி சாப்பிட்டு கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வீட்டில் சுவர் இடிந்து மலர்க்கொடி மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மலர் கொடியும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.