திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜி.டி.என் சாலையில் இருக்கும் திருநகரில் ஜோஸ்பின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜோஸ்பின் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் சுவிட்சை அணைப்பதற்கு மறந்து வீட்டை பூட்டிவிட்டு ஜோஸ்பின் பள்ளிக்கு சென்று விட்டார். இதனையடுத்து மீண்டும் மின்சாரம் வந்ததால் கிரைண்டர் தானாக நீண்ட நேரம் இயங்கி சூடாகி தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.
சிறிது நேரத்தில் சமையல் அறையில் இருந்த பொருட்களிலும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். கேஸ் சிலிண்டர் அனைத்து வைக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.