Categories
தேசிய செய்திகள்

சூதாட்ட மோகம்… துரத்திய கடன்… தாய் மற்றும் தங்கையை பலிகொடுத்த மாணவன்..!!

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க தாய் மற்றும் தங்கையை கொலை செய்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.

ஹைதராபாத் மெட்ச்சல் பகுதியை சேர்ந்த சாய்நாத் என்பவர் எம்.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் படித்துக்கொண்டே வாகன விற்பனை ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து தந்தையின் சேமிப்பு மற்றும் காப்பீட்டு தொகையாக 40 லட்சம் தாய் சுனிதாவின் பெயருக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சாய்நாத் சமீபகாலமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு 20 லட்சம் பணத்தை இழந்துள்ளார். மேலும் லட்சக் கணக்கில் கடன் வாங்கி வைத்துள்ளார்.  கடனை திருப்பி கேட்டு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தந்துள்ளனர். இதனால் தாய் மற்றும் தங்கையை கொலை செய்துவிட்டால் வீட்டை விற்று கடனை அடைத்து விடலாம் என்று எண்ணி 23ஆம் தேதி காலை உணவில் பூச்சி மருந்தை கலந்து வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

அந்த உணவை சாப்பிட்ட சுனிதாவும், தங்கை அனுஷாவும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். பின்னர் மாலையில் வீடு திரும்பிய சாய்நாத் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். 27ஆம் தேதி தங்கை அனுஷாவும், 28ஆம் தேதி தாய் சுனிதாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சாய்நாத் நடத்தையில் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரைப் பற்றி மெட்ச்சல் போலீசாருக்கு புகார் அளித்தனர். விசாரணையில் சூதாட்ட கடனை அடைக்க தங்கை மற்றும் தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இவர் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டார்.

Categories

Tech |