பிரதமர் மோடி பேசியது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பாராட்டினார்.
நேற்று நடந்த திமுக பிரச்சார கூட்டத்தில் முக.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார். திண்டுக்கல்லில் நடந்த சிறப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 11ஆம் தேதி மகா கவி பாரதியாரின் பிறந்த நாள் விழா. நமது பிரதமர் மோடி அவர்கள் பாரதியாரை புகழ்ந்து பேசியிருக்கிறார். அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என பாரதியார்பாடினார் என்று பிரதமர் கூறினார். அந்த வரியின் முழுப் பொருளையும் பிரதமர் உணர்ந்துதான் மேற்கோள் காட்டினார? என்று நான் கேட்க விரும்புகிறேன்.
தனி ஒரு மனிதனுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் இந்த உலகத்தையே அழித்து விடுவோம் என்று கோபப்பட்டார் தமிழ் கவி பாரதியார். ஆனால் இன்று நாட்டின் நிலைமையை பிரதமர் நான் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அனைத்தும் அவர் தெரிந்ததே மத்திய அரசு கொண்டு வரும் 3 வேளாண் சட்டங்களும் வறுமையை உருவாக்கும் சட்டங்களாக தான் இருக்கப் போகும் என்பதை லட்சக்கணக்கான விவசாயிகள் வீதிக்கு வந்து சொல்லிக்கொண்டிருப்பது பிரதமர் காதில் விழவில்லையா? எனக் கேட்க வேண்டும்.
போராட்டத்தால் இந்தியாவை பற்றி எரிகிறது. தலைநகரான டெல்லி 20 நாட்களாக நடுங்கிக் கொண்டிருக்கிறது. உயிர்கொடுக்கும் உழவர் உயர் விலைபேசி விற்கப்படும் வகையில் 3 வேளாண் சட்டங்கள் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை என முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தமிழ் மொழியையும் தாய்நாடான இந்தியாவையும் பாரதியார் தனது இரண்டு கண்களாக பாவித்தவர் என்று பிரதமர் மோடி அவர்கள் பாரதியாரின் பிறந்த நாள் விழாவில் பெருமையாக பேசி இருக்கிறார் மிக்க மகிழ்ச்சி. அந்த தமிழ் மொழியை காப்பதற்காக உருவாக்கப்பட்ட செம்மொழி ஆய்வு நிறுவனம் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை பிரதமர் அவர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.