தமிழகத்தில் பள்ளி கல்வி கற்காத மாணவர்கள் யாருமே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கும் வண்ணம் செயல்பட தொடக்கக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர்களுடைய இடங்களுக்கே சென்று சேர்க்கை நடத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரான ஜெயக்குமார் ஞானராஜ் தன்னுடைய பள்ளியை ஒட்டியுள்ள நூற்பு ஆலைக்கு நேரில் சென்று அங்கு தங்கி பணிபுரியும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மற்றும் தமிழக அரசு வழங்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சலுகைகளையும் எடுத்துரைத்தார்.
மேலும் புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து 1000 ரூபாய் மற்றும் எழுதிய பல்வேறு கற்றல் உபகரணங்கள் வழங்குவதாகவும் கூறியுள்ளார். இந்த தலைமையாசிரியர் வருடம்தோறும் இந்த பள்ளியில் சேர்வோருக்கு பல்வேறு உதவிகளை தன்னுடைய சொந்த பணத்தில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.