இந்த வருடத்தில் சுமார் 38,000 பிரஷர்களுக்கு வேலை கொடுக்க இருப்பதாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பிரச்சினை வந்த பிறகு இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தேவை குறைந்துவிட்டது. ஊழியர்கள் பலர் தங்களது வேலையையும் சம்பளத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இருந்தாலும் நிறைய பேருக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதி கிடைத்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பிரச்சனைகள் குறைந்து உள்ளதால் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
அதனால் ஐடி துறையிலும் புதிய வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு போன்ற விஷயங்களில் நிறுவனங்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. அவ்வகையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி 2022-2023 ஆம் நிதியாண்டில் மட்டும் 38 ஆயிரம் பிரஷர்களுக்கு வேலை கொடுக்க திட்டமிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 19 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை கொடுத்திருந்த நிலையில் இந்த ஆண்டில் இரு மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் இன்னும் அதிகம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விப்ரோ நிறுவனத்தைப் போலவே மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களும் புதிய வேலைவாய்ப்புகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி டிசிஎஸ் 40 ஆயிரம் பேருக்கும், இன்போசிஸ் நிறுவனம் 50 ஆயிரம் பேருக்கும், ஹெச்.சி.எல் நிறுவனம் 45 ஆயிரம் பேருக்கும் வேலை வழங்க திட்டமிட்டுள்ளது.