நெதர்லாந்திற்கு எதிராக வெற்றி பெற்றாலும் ரோஹித் சர்மா தலைமையிலான அணி சில அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்றும், சூர்யகுமாரை பாராட்டியும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பேசினார்..
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்றுவரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணியை வீழ்த்தி குரூப் 2 பிரிவில் புள்ளி பட்டியல் முதல் இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் இந்தியா கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும். இந்தநிலையில் கடைசியாக நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ரோஹித், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அரைசதங்களால் மென் இன் ப்ளூ 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது. இருப்பினும் முதல் 10 ஓவரில் இந்திய அணி பொறுமையாகவே ஆடியது.. பின்னர் தான் அதிரடி காட்டியது. இதையடுத்து ஆடிய நெதர்லாந்து 56 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது.
இப்போட்டியில் புவனேஷ்வர் குமார் புதிய பந்தில் அருமையாகவீசினார், அவர் தொடர்ந்து 2 மெய்டன்களை வீசினார். மற்றும் அவரது 3 ஓவர்களில் 9 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளுடன் முடித்தார், அதே நேரத்தில் இரு சுழற்பந்து வீச்சாளர்களும் மிகவும் சிறப்பாக இருந்தனர். கே.எல்.ராகுல் மட்டும் பிரகாசிக்க தவறினார். மேலும், அர்ஷ்தீப் இறுதி ஓவரில் சில ரன்களை கசியவிட்டார், இது வரவிருக்கும் பெரிய ஆட்டங்களைக் கருத்தில் கொண்டு தவிர்க்க வேண்டியதாக இருக்கிறது..
இந்நிலையில் பேட்டிங் செய்யும் போது இறுதி ஓவர்களில் இந்தியா மெதுவான தொடக்கத்தை ஈடுசெய்ததாகவும், பந்துவீச்சுக்கு இன்னும் முழுமை தேவை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் குறிப்பிட்டார்.
இந்திய அணி பந்துவீச்சில் மாற்றம் தேவை :
இதுகுறித்து அவர் கூறியதாவது, “பவுலிங் சிறப்பாக உள்ளது. பேட்டிங்கில் இந்தியா அதிக ரன்கள் எடுத்திருக்கலாம் என்று நான் உணர்ந்தேன், ஆனால் கடைசி 10 ஓவர்களில், 100 ரன்களுக்கு மேல் எடுத்ததன் மூலம் அதை ஈடுகட்டினார்கள். ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியதாக இருப்பதால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கிறது. நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக, லைன் மற்றும் லென்த் அடிப்படையில் எங்கு பந்து வீசுவது என்பது குறித்து சரியான திட்டமிடல் இருக்க வேண்டும். இந்திய அணி பந்துவீச்சில் முன்னேறி இருந்தாலும் ஆங்காங்கே சில குறைகள் இருக்கிறது என்றார்.
மேலும் பெரிய விஷயம் என்னவென்றால், இதுபோன்ற போட்டிகளில் நோ-பால் அல்லது வைடுகள் இருக்கக்கூடாது, ஏனெனில் நீங்கள் பயிற்சி ஆட்டம் போன்று நினைத்து ஆடவேண்டும்.. எனவே ஒட்டுமொத்தமாக, நான் கூறுவேன், பந்துவீச்சு நன்றாக இருந்தது ஆனால் இன்னும் சில ஓட்டைகள் இருக்கிறது என்று கூறினார்..
சூர்யகுமார் யாதவுக்கு பாராட்டு :
“சூர்யகுமார் யாதவ் உண்மையில் இந்த அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப்பயன்படுத்தி உள்ளார். இவ்வளவு விரைவாக ரன்களை எடுக்கும் அவரை அதிகம் பாராட்ட வேண்டும். கேப்டன் ரோஹித் சர்மா இன்னும் கொஞ்சம் கச்சிதமாக ஆட வேண்டும், ரோஹித் அதிரடியாக ஆடுவது இந்திய அணிக்கு முக்கியம். மேலும் ராகுல் சில ரன்கள் எடுக்க வேண்டும். விராட் கோலி நங்கூரமாக விளையாட வேண்டும், அவர் 20 ஓவர்கள் முழுவதும் விளையாட வேண்டும்.. ஏனெனில் அவர் எப்போது வேண்டுமானாலும் வேகத்தை அதிகரித்து ரன்களை குவிப்பார்.. கடந்த 1-2 ஆண்டுகளில், நாங்கள் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த வீரர் – நம்பர் 4 இல் நமக்காக யார் பேட்டிங் செய்யப் போகிறார்கள்? என்ற கேள்விதான்.. ஆனால் சூர்யகுமார் யாதவ் அந்த இடத்தை நிரப்புகிறார் என்று பாராட்டினார்..