தமிழ்நாடு இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கும் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழக இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்த பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்களுடைய வறுமையைப் போக்கும் விதமாக மாதம் 500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் இந்த ஓய்வூதியம் டிசம்பர் 2011 ஆம் வருடம் ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இதனையடுத்து தற்போது நடைபெறும் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக தங்களுக்கு இந்த ஓய்வூதியம் பத்தாது என்றும் ஓய்வூதியத்தை ஆயிரத்திலிருந்து 3000 ஆக உயர்த்தி வழங்கி பதிவு பெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஓய்வூதியம் 3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்திற்கான ஆணையை பரம்பரை மருத்துவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.