பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் 475 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ரவிக்குமாரை தாக்கிய வகாப் மற்றும் சதாம் உசேன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் தேனி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சீனிவாசன், தேனி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் முகமது சபீர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு திரண்டு அங்கிருந்து சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் மேற்கண்ட 2 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவல்துறையினரை கண்டித்தும், முஸ்லிம்கள் மீது அவதூறு செய்தியை பரப்பும் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்களை எழுப்பி உள்ளனர்.
மேலும் காவல்துறையினர் கூறியும் அவர்கள் போராட்டத்தை கைவிடாததலால், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் முகமது சபீர், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் உள்பட மொத்தம் 475 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களை தேனி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.