சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசானது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சூரப்பாவை எதிர்த்து வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் என்பவரது தலைமையிலான ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பொது நல வழக்கறிஞர் டிராபிக் ராமசாமி கடந்த மாதத்தில் துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது நல வழக்காக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கில், ஒரு நபர் இரண்டு முறைக்கு மேல் துணைவேந்தராக பணியாற்ற முடியாது என்று மானியக்குழு விதிகளில் கூறப்பட்டுள்ளது. எனினும் சூரப்பா கடந்த 2009ஆம் வருடம் முதல் 2015 ஆம் வருடம் வரை சுமார் ஆறு வருடங்கள் பஞ்சாப்பில் ஐஐடி இயக்குனர் பதவியில் உள்ளார். மேலும் 2016 மற்றும் 2017 ஆம் வருடங்களில் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் டீன் பதவியிலும் இருந்துள்ளார்.
அதாவது துணைவேந்தர் பதவிக்கு இணையான இயக்குனர் பதவியை அவர் ஏற்கனவே வகித்துள்ளதால் மீண்டும் அண்ணா பல்கலை துணைவேந்தராக அவரை நியமித்திருப்பது, பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து சென்னை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்திய அறிவியல் கல்வியின் டீன் பதவியானது, ஐஐடி துணைவேந்தர் பதவிக்கு சமமானது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை.
எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர். இந்நிலையில் தற்போது அதிக ஆவணங்களை இணைத்து மீண்டும் இதே வழக்கை தாக்கல் செய்துள்ளார் டிராபிக் ராமசாமி. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி தலைமையில் விசாரணைக்கு வந்துள்ளது. இதில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, “இது பொது நல வழக்காக இல்லை, மேலும் அரசு பதவியில் இருப்பவர்களுக்கு எதிரான கோ வாரண்டோ மனுவை தாக்கல் செய்யலாம் என்று மீண்டும் இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர்.