சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது. அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும்.
இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கிரகணம் மேற்கு அடிவானில் புலப்படும். மேலும் பகுதி சூரிய கிரகணம் என்பதால் முழுமையாக சூரியன் மறைந்து விடாது.மேற்கு அடிவானத்தை தெளிவாக காணக்கூடிய பகுதியில் இன்று நோக்கினால் மாலை ஐந்து மணிக்கு கிரகணம் தொடங்குவதை காண முடியும். ஒரு ஆப்பிள் கடித்ததை போல சூரியனின் முகத்தில் ஒரு பகுதியில் சற்று நிழல் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.மேலும் கிரகணம் நடைபெறும் நாளில் திருமலையில் உள்ள அன்னபிரசாத பவனில் அன்னபிரசாதம் வழங்கப்படாது எனவும் பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு திருமலை யாத்திரைக்கு திட்டமிடுமாறும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது