தமிழகத்தில் விவசாயிகள் சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய மின் வேலிகள் அமைப்பதற்கு அரசு மானியம் வழங்கி வருகிறது.
விவசாயிகள் சூரியசக்தியினால் இயங்ககூடிய மின் வேலிகள் அமைக்க தமிழக அரசு மானியம் வழங்குகிறது. இதற்காக 2020 – 2021 நிதியாண்டில் 3 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. யானைகள், காட்டெருமைகள், குரங்குகள் போன்ற விலங்குகள் பயிர்களை பெரிதும் சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய மின்வேலிகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர். விலங்குகள் இதனை அணுகும் போது உடலில் லேசான அதிர்வு ஏற்படும். இதனால் உயிர் சேதங்கள் ஏற்படாது.
மேலும் சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய இந்த மின் வேலி அமைக்க தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இந்த மானியம் பெற நீங்கள் விரும்பினால் உங்கள் அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறையை அணுக வேண்டும். அதிகாரியைச் சந்திக்கும் முன் ஆதார் கார்ட் நகல், தங்களுடைய புகைப்படம் இரண்டு, தங்களுடைய நிலத்தின் சான்றிதழ் மற்றும் சிறு குறு விவசாயி சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் எடுத்துச் செல்லுங்கள்.