சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சரண் வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, திவ்யா துரைசாமி, இளவரசு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது இந்த படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சரண் வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குமுன் நடிகர் சரண் தனுஷின் வடசென்னை படத்திலும், நயன்தாராவின் நெற்றிக்கண் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.