நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக நாளுக்கு நாள் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனாவின் வேகம் குறைந்தது. அப்போதும் எதிர்பாராத விதமாக கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது . கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் 2-வது அலையாக தாக்க தொடங்கிய தொற்று அடுத்தடுத்த மாதங்களில் கோரத்தாண்டவமே ஆடிவிட்டது.இந்த முறை டெல்டா, டெல்டா பிளஸ் என பல வகைகளில் உருமாறி தாக்கியது. இதனால் மக்களால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. பண்டிகை காலம் மற்றும் பல மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களால் ஏற்பட்ட மக்கள் நெரிசல்கள், கொரோனாவின் பரவலுக்கு ஏதுவாகி விட்டன.இதன் விளைவாக முதல் அலையில் சுமார் 1 லட்சம் மரணங்களை அந்த கொரோனா, 2-வது அலையில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிவிட்டது.
ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை என சுகாதார உள்கட்டமைப்பு மொத்தத்தையும் அலற வைத்து விட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக சுடுகாட்டில் கூட இடப்பற்றாக்குறை நிலவியதுதான் பெரும் சோகம்.இந்தியாவை 3-வது அலையும் தாக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் அப்போதே எச்சரித்தனர். எனவே தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தவும் கூறியிருந்தனர்.அவர்கள் கணித்ததுபோலவே 3-வது அலையும் தற்போது நாட்டில் நுழைந்து விட்டது. தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரானால் இந்த புத்தாண்டின் தொடக்கத்திலேயே கொரோனாவின் 3-வது அலை வீசத்தொடங்கி இருக்கிறது. கடந்த மாதம் 28-ந்தேதி 9,195 ஆக இருந்த தினசரி பாதிப்பு ஒரே வாரத்தில் அதாவது கடந்த 4-ந்தேதி 58 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து விட்டது.
இது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த முந்தைய 24 மணி நேரத்தில் 1.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாதாரண பொதுமக்கள் முதல் மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், நீதிபதிகள், விளையாட்டு-அரசியல் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரையும் விட்டுவைக்கவில்லை இந்த கொரோனா.நாடு முழுவதும் போடப்பட்டு உள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை சுமார் 150 கோடியை எட்டியுள்ள நிலையில் கொரோனாவின் 3-வது அலை இத்தனை வேகமாக வீசுவது எப்படி என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 1.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், பலி எண்ணிக்கை வெறும் 146 மட்டுமே.
அதற்காக அரசும், சுகாதாரத்துறையும், பொதுமக்களும் மெத்தனமாக இருக்கக்கூடாது என்பதுதான் மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும். எனவே தான் தொற்றை விரைந்து கட்டுப்படுத்த மாநில அரசுகள் தனித்தனியாக பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றன. அரசும், சுகாதாரத்துறையும் தொற்றுக்கு எதிராக போராடினாலும் ஒவ்வொரு தனிமனிதனும் கொரோனாவுக்கு எதிராக ஆயுதத்தை தூக்கினால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்.எனவே கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை போட்டு, பொருத்தமான நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே சுழன்றடிக்கும் சூறாவளியை கட்டுப்படுத்த முடியும்.