திண்டுக்கலில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்த நிலையில், அதனை கையில் எடுத்து மக்கள் ரசித்தனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல் நல்லாம்பட்டி, குள்ளனம்பட்டி, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்தது. இதனால் வடமதுரை அருகில் புதுகளராம்பட்டி கிழக்குத் தெருவில் உள்ள மின் கம்பம் ஒன்று திடீரென்று முறிந்து கீழே விழுந்தது. அப்போது அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
ஆனாலும் மின்கம்பிகள் அருகே இருந்த ஜெயராம், மருதமுத்து உட்பட 3 பேரின் வீடுகளின் மீது விழுந்ததால் அந்த வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. வெகு நேரம் ஆகியும் மின்கம்பத்தை சரி செய்யாததால் அந்தப் பகுதியில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். மேலும் அந்தப் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதில் கீழே விழுந்து சிதறிய ஆலங்கட்டிகளை பொதுமக்கள் கையில் சேகரித்து பார்த்து மகிழ்ந்தனர்.