திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் திடீரென பெய்த கனமழையால் மூன்று கடைகளில் ஆஸ்பெட்டாஸ் ஓடுகளால் போடப்பட்டிருந்த மேற்கூரை சாலையில் விழுந்து நொறுங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே நேற்று முன்தினம் மாலை பிலாத்து பகுதியில் சூறாவளி காற்றுடன் திடீரென பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் உள்ள சில கடைகள் எதிர்பாராதவிதமாக சேதமடைந்தது. அதிலும் குறிப்பாக வாலிசெட்டிபட்டி செல்லும் சாலையில் திருமலைசாமி என்பவருடைய மூன்று கடைகளில் சூறைக் காற்றினால் ஆஸ்பெட்டாஸ் ஓடுகளால் போடப்பட்டிருந்த மேற்கூரை காற்றில் பறந்து சாலை பகுதியில் விழுந்து நொறுங்கியது.
அதேபோல் மின்சார கம்பிகள் மூன்று இடங்களில் அறுந்து விழுந்தன. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள் அறுந்து விழுந்த மின்சார கம்பிகளை சீரமைத்து கொடுத்தனர்.