சூறையாடப்பட்ட சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தடவியல் துறை குழுவினரால் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் கணியாமூரில் நடைபெற்ற வன்முறையால் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சூறையாடப்பட்டு பஸ்கள் மற்றும் போலீசாரின் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
இந்த பள்ளிக்கு தடவியல் துணை இயக்குனர் சண்முகம் தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் வந்து தடயங்களை சேகரித்துள்ளனர். இந்த நிலையில் கலவரத்தில் தீ வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் போன்ற பல்வேறு தடயங்களை சேகரித்துள்ளனர்.