மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் இந்த போராட்டம் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் சூழியல் ஆர்வலர் திஷா ரவி என்ற இளம்பெண் கைது நடவடிக்கையை கண்டித்து கமலஹாசன் டுவிட் செய்துள்ளார். இதில் “கல்லூரி மாணவி சூழியல் அக்கறையாளர் திஷா ரவியை கடுமையான வழக்குகளில் கைது செய்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேச துரோகம் என்ற பெயரில் மாற்றுக்கருத்துக்களின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்” என்று பதிவிட்டுள்ளார்.