தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகமுழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு காலங்களில் பொது போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இதன்பின் கொரோனா நோய் பரவல் நாளடைவில் வெகுவாக குறைந்தது அடுத்து முழு ஊரடங்கு அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து மீண்டும் இயங்கத் தொடங்கியது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரயில் பயணிகள் சேவைகளும் பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னதாக நாள்தோறும் செங்கோட்டை-மதுரை இடையே 3 பயணிகள் ரயில் காலை 7 மணி, 11 மணி, 5 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது.இதனால் செங்கோட்டை, தென்காசி, கடைய நல்லூர், பாம்பு கோவில்சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் அவற்றை சுற்றி உள்ள கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர்.
தற்போது பொது போக்குவரத்து தொடங்கி இருக்கும் நிலையில் இந்த பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த சூழலில் பயணிகள் கோரிக்கைகளை ஏற்ற ரயில்வே நிர்வாகம் தற்போது படிப்படியாக ரயில் சேவையை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில், திருச்சி – மானாமதுரை – திருச்சி, நெல்லை – நாகர்கோவில் – நெல்லை, செங்கோட்டை – மதுரை – செங்கோட்டை ரயில்களுக்கு மீண்டும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று 1ம் தேதி முதல் மதுரை – செங்கோட்டை விரைவு ரயில் வண்டி எண்: 06662/06665 முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவையை பயணிகள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.