மகாராஷ்டிராவில் யூடியூபை பார்த்து கருக்கலைப்பு செய்த இளம்பெண் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகி வந்ததாக தெரிகிறது. இந்த பழக்கத்தால் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இதுபற்றி ஆண் நண்பரிடம் தெரிவித்தபோது அவர் கருவை கலைத்து விடும்படி கூறியுள்ளார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு சென்று கருக்கலைப்பு செய்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்று முடிவு செய்த அவர்கள் ரகசியமாக கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஆண் நண்பர் இது சம்பந்தமான சில வீடியோக்களை யூடியூபில் பார்த்து அது பற்றி அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
அப்பெண்ணும் அந்த யூடியூப் வீடியோவை பார்த்து கருக்கலைப்பு செய்துள்ளார். இதில் அவருக்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டு மயக்க நிலையை அடைந்துள்ளார். மேலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இது பற்றி அறிந்த அவருடைய பெற்றோர்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவருடைய நண்பர் யார் என்று விசாரித்தனர், அவர் பெயர் சோயிப்கான் என்பதும் அவர் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயது வாலிபர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.