கொக்குகள் செத்து மிதப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஸ்டேன்மோர் எஸ்டேட்டுக்கு செல்லும் வழியில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இந்த படகு இல்லத்தில் கக்கன் காலனியில் இருந்து வரும் ஆற்று தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆற்று நீருடன் கழிவு நீர் கலந்து குப்பைகள் தேங்கி நிற்பதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் படகு இல்லத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கொக்குகள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் கொக்குகள் இறந்தது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும், படகு இல்லத்தை சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.