வட கிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 20 கோடி ரூபாய் நிதிஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூருவில் ஏற்பட்ட வரலாறுகாணாத வெள்ளத்தை அடுத்து தமிழகம் முன்கூட்டியே தயாராக இருக்கவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியது ஒருபுறம் இருந்தாலும், அதை தவிர்க்க காலநிலை மாற்றத்தையும் அதன் தீவிரத்தையும் உலகநாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு ஆகும். இந்நிலையில் தான் சென்னைக்கான காலநிலைமாற்ற செயல்திட்டத்தின் வரைவு அறிக்கையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை மீது பொதுமக்கள் வருகிற 26ஆம் தேதி வரை கருத்து கூறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிக்கையின் அம்சங்கள் பற்றியும், இவற்றில் இன்னும் சேர்க்கப்பட வேண்டியவை குறித்து சுற்றுச்சூழலுக்கான தன்னார்வ அமைப்பான பூவுலகின் நண்பர்கள் கூறுவது பற்றியும் தெரிந்து கொள்வோம். சென்ற 20 வருடங்களாக நிகழ்ந்த நகரமயமாக்கல், சென்னையின் மக்கள்தொகை அதிகரித்ததோடு அதன் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வெள்ளப்பெருக்கு, கடல்மட்ட உயர்வு ஆகியவை அதிகரித்துள்ளன.
இதனை சமாளிக்க காலநிலை மாற்றத்திற்கு எதிரான தன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவும், சென்ற 2016 ஆம் வருடம் சென்னை C-40 அமைப்பில் இணைந்தது. இதில் C-40 என்பது காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உலகில் உள்ள 100க்கும் அதிகமான முன்னணி நகரங்கள் இணைந்த அமைப்பாகும். இந்நிலையில் 5 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படக்கூடிய வெள்ள பாதிப்பால் சென்னையினுடைய 29 புள்ளி ஒரு சதவீத நிலப்பகுதியும், 25 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படக்கூடிய வெள்ள பாதிப்பால் 46 சதவீத நிலப்பகுதியும் பாதிக்கக்கூடிய அபாயத்தில் உள்ளது. அத்துடன் 100 வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படக்கூடிய வெள்ள பாதிப்பால் 56 புள்ளி 5 % நிலப்பகுதியும் பாதிக்கக்கூடிய அபாயத்தில் இருப்பதாக இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.