மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டிசம்பர் 7-ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னையிலிருந்து தெற்கு, தென் கிழக்கே 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு 200 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
மேலும் இந்த புயல் மேற்கு, வட மேற்கு திசையில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. காரைக்கால் – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் வழியாக இந்த புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையை தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் சென்னையில் காலை முதல் பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், எம்.சி.ஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.