சென்னையிலிருந்து கடத்தி வந்த 13 1/2 கிலோ கஞ்சாவை மார்த்தாண்டம் காவல்துறையினர் பறிமுதல் செய்து, பெண் உட்பட 2 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சா கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்படி காவல்துறையினர் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதன்படி மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மார்த்தாண்டம் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் மார்த்தாண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது காந்தி மைதானத்தில் ஒரு வாலிபரும், ஒரு பெண்ணும் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்கள். உடனே காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தால் அதில் காகித பொட்டலங்களில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அதில் 15 பொட்டலங்களில் 13 1/2 கிலோ கஞ்சா இருந்தது.
அதன் பின் காவல் துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களை மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபர் மார்த்தாண்டம் அருகே கண்ணனூர் பூந்தோப்பு பகுதியில் வசித்த மத்தியாஸ் என்பவருடைய மகன் 25 வயதுடைய ராஜேஸ்வரன் என்பதும், அந்தப் பெண் திருவண்ணாமலை மாவட்டம் தொக்கவாடி பகுதியில் வசித்த ரகு என்பவருடைய மனைவி 38 வயது அஜந்தா என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் 2 பேரும் மார்த்தாண்டம் பகுதியில் கஞ்சாவை விற்பதற்காக சென்னையிலிருந்து கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.