சென்னையில் இப்போது நடைபெறும் மெட்ரோ இரயில் வழித்தடபணி, மழைநீா் வடிகால்வாய் ஆகிய குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு சாலைகள் குறுகலாகி இருக்கிறது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று அவ்வபோது சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், தற்காலிக போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது. இதன் காரணமாக சூழ்நிலையைச் சமாளிக்க பல்வேறு நேரங்களில் குறிப்பிட்ட சாலையை ஒருவழி (அல்லது) இருவழிகளையும் போக்குவரத்து போலீஸாா் மூடுகின்றனா்.
இதற்கிடையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தடுப்பதற்கு, தனியாா் நிறுவனத்துடன் இணைந்து சென்னை போக்குவரத்து போலீஸாா் “சாலை எளிமை” எனும் செயலியை உருவாக்கி இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையிலுள்ள சாலைகளின் போக்குவரத்து நிலைகள் பற்றி உடனுக்குடன் கூகுள் மேப்பில் அறிவிக்கும் இந்த செயலி சேவையை, பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் நேற்று அறிமுகப்படுத்தி வைத்தாா். இதற்காக நடந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்துப்பிரிவு கூடுதல் காவல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா் முன்னிலை வகித்தாா்.