சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூல் செய்யும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு இ-சலான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல் ஈடுபடுபவரிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்ட வந்தது. தொடர்ந்து qr கோடு முறையில் அபராதம் செலுத்தும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. முக்கியமாக மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், கைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல் உள்ளிட்ட 8 போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அதிக அளவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து போக்குவரத்து துறையினர் அடுத்த கட்டமாக ராங் ரூட்டில் வாகனம் ஓட்டுவதினால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றது. அதே வேளையில் ராங் ரூட்டில் வாகனங்கள் செல்வதினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதை தடுப்பதற்கு வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த தொகையை எளிதாக செலுத்தி விடுகின்றனர்.
இவற்றை தடுக்க ராங் ரூட்டில் பயணிப்பவர்களுக்கு 1100 அபராதம் விதிக்க சென்னை காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த முடிவின்படி திங்கட்கிழமை முதல் ராங் ரூட்டில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு 1100 அபராதம் விதிக்கப்பட்டது. திங்கட்கிழமை மட்டும் 1300 வாகன ஓட்டிகள் ராங் ரூட்டில் சென்றதால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறையின் போக்குவரத்து பிரிவு உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.