சென்னையில் பயணிகளின் தேவைக்காக இன்று முதல் கூடுதலாக 86 மின்சார ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மின்சார ரயில்களும் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 40 மின்சார ரயில் சேவைகளில் இருந்து 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கூடுதலாக 30 மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, 150 சேவைகள் இயக்கப்பட்டது.
இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் மின்சார ரயிலில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் மேலும் கூடுதலாக மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, தற்போது 320 சேவைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ரயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், கொரோனா பரவலை தடுக்கும், மீண்டும் சென்னையில் மின்சார ரயில் சேவை இன்று முதல் அதிகரிக்கப்படுகிறது.
இதுபற்றி தெற்கு ரயில்வே அதிகாரி கூறுகையில், “ஏற்கனவே சென்னையில் 320 மின்சார ரயில் சேவைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிப்பதற்கு மேலும் கூடுதலாக 86 சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று முதல் சென்னையில் 406 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இதனையடுத்து வழக்கமான ரயில் சேவை விரைவில் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.