தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 23ஆம் தேதி வரை அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் உள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி. என். டி ரோடு, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும். 100 அடி சாலை பாடி மேம்பாலம் வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச் சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்.
கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து 100 அடி சாலை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ஈவிஆர் சாலை வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3வது அவென்யூ, 2வது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு, வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் ஈவிஆர் சாலையில் மதுரவாயில் நோக்கி செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13வது மெயின் ரோடு, 2வது அவென்யூ சாலை, எஸ்டேட் ரோடு, வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். வடபழனி நோக்கி செல்லும் தனியார் வாகனங்கள் என்.எஸ்.கே நகர் சந்திப்பு ரசாக் கார்டன், எம். எம். டிஏ காலனி, விநாயகபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.