சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணி எப்போது தொடங்கும் என்பது குறித்த முக்கிய தகவலை விமான போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் கூறியிருந்தார். இதையடுத்து விமான நிலையங்களின் ஆணையம் சென்னையில் அண்மையில் ஆய்வு செய்தது.
அதன் அடிப்படையில் சென்னை புறநகர் பகுதிகளான பன்னூர் அல்லது பரந்தூரில் சென்னை விமான நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் “சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். இதற்காக சென்னை அருகே 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பரில் இதற்கான பணிகள் துவங்கப்படும். 2024 ஆம் ஆண்டுக்குள் இந்த பணி முடிக்கப்பட்டு விடும். இதுதொடர்பாக டெல்லியில் வரும் 16ஆம் தேதி விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது” என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.